சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!


தைப்பாவாய் தைப்பாவாய்
வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்
தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்
தென்றலென வந்தாள் தேன்பாவாய்

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்
மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்
தேரினில் ஏறிய தென்பாவாய்
ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

சூரியதேவன் சுடர்ப்பாவாய்
சுந்தரவதனச் செம்பாவாய்
ஏருழவர் கை உழைப்பாவாய்
ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

அன்பென்று கொட்டு முரசாவாய்
அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்
இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்
இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்

பொன் யுக வாசல் திறந்ததென்று
கொம்பெடுத்தூதடி எம்பாவாய்
சங்கு முழங்கடி எம்பாவாய்
சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்


போற்றி பாடடி பொன்பாவாய்
புதுயுகத்தின் பொங்கல் எம்பாவாய்
ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க
ஆனந்தக் கும்மி அடி பாவாய்

சு.வில்வரத்தினம்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்