தமிழ்ப் பொங்கல்



கரும்புக்கை நீட்டுகின்ற தோட்டம், எங்கள்
கற்கண்டுச் செந்தமிழை நினைவுறுத்தும்
விரிந்தஇலை பரப்புகின்ற வாழை, பொங்கல்
விருந்துக்கு வரச்சொல்லி அழைப்பு வைக்கும்
வரிசைபெறும் நெற்குவியல் பொன் மலைபோல்
வளம்காட்டி வறுமைக்கு விடை கொடுக்கும்
தரிசுநிலம் திருத்திவந்த பயன் அனைத்தும்
தைத்திங்கள் தரும்பொங்கல் எடுத்துரைக்கும்
நன்செய்யும் புன்செய்யும் தழைத்து நிற்கும்
நல்லழகில் தோய்ந்தவர்க்கு நலிவே இல்லை
மண்செய்யும் விந்தைகளின் விளக்கம் ஆகும்
மருதத்தின் மண்புசொல்ல வார்த்தை யில்லை
புண்செய்து போட்டநிலம் நம்மைப் பார்த்துப்
'புசி'என்று புகன்றிடவே போகும் தொல்லை !
பண்செய்த தமிழாலே உழவைப் போற்றிப்
பாடாமல் நமக்கிங்கே என்ன வேலை ?
***
இக்பால்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்